உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் வைப்பூரில் கிருமி தொற்று பீதி

கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் வைப்பூரில் கிருமி தொற்று பீதி

ஸ்ரீபெரும்புதுார், : வைப்பூர் கிராமத்தில், பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாயில் செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை மாற்றி அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில் 250க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பீஹார், ஒடிசா, அசாம், கோல்கட்டா, ஜார்க்கண்ட், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், வைப்பூர் மேட்டுத் தொருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, இங்குள்ள வீடுகளுக்கு, குழாய் வாயிலாக நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அவ்வாறு செல்லும் குடிநீர் குழாயின் பைப், கழிவுநீர் செல்லும் கால்வாயில் செல்கின்றன. இதனால், குடிநீர் பைப்பில் லேசான விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.கழிவுநீர் கால்வாயில் செல்லும் குடிநீரை பருகும் அப்பகுதி மக்கள், நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெருவாரியான மக்கள், அதிக விலைக்கு கடைகளில் குடிநீர் கேன் வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் குழாய் இணைப்பை, கழிவுநீர் கால்வாயில் இருந்து மாற்றி அமைக்க, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால், குடிநீர் குழாயை மாற்ற முடியவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூர் கிராமத்தில், தொற்று கலந்த குடிநீரை பருகிய இரண்டு மூதாட்டி உயிரிழந்தனர்; மேலும், 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே, கழிவுநீர் கால்வாயில் செல்லும் குடிநீர் குழாய் வாயிலாக தொற்று நோய் பரவி, உயிர் பலி ஏற்படும் முன், குடிநீர் குழாய் இணைப்பை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை