உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வையாவூரில் வயிற்றுப்போக்கிற்கு காரணம் குடிநீரில் பாக்டீரியா தொற்று

வையாவூரில் வயிற்றுப்போக்கிற்கு காரணம் குடிநீரில் பாக்டீரியா தொற்று

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வையாவூரில் வயிற்றுப் போக்கால் இரண்டு பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில், வயிற்றுப்போக்கிற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வையாவூர் ஊராட்சி காலனி பகுதியில், திறந்தவெளி கிணற்றிலிருந்து வீடுகளுக்கு 'சப்ளை' செய்யப்பட்ட குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக, கடந்த வாரம், கிராமவாசிகள் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில், அசுவணி, 91, மற்றும் சரோஜா,80, ஆகிய இரு மூதாட்டிகள் இறந்தனர்.சுகாதார பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என, ஊராட்சி செயலர் பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஊரக வளர்ச்சித் துறையினர் துாய்மை பணியை மேற்கொண்டனர். சுகாதார துறையினர் மருத்துவ முகாம்களை அமைத்து கிராமத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் சப்ளை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியிலிருந்து டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.தற்போது பாதிப்பு எதுவும் இல்லாததால், கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் குளோரினேஷன் செய்து இரு நாட்களாக ஊராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தெரிவித்தார்.வையாவூரில் சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், தண்ணீரில் தான் பிரச்னை என கண்டறிந்தனர். இதையடுத்து, சுகாதாரத் துறையினர் குடிநீர் மாதிரிகளை எடுத்து, கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி இருந்தனர்.இந்நிலையில், வையாவூரில் ஏற்பட்ட வயிற்றுபோக்கிற்கு குடிநீரில் பாக்டீரியா தொற்று இருந்தது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் கூறியதாவது:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வையாவூரைச் சேர்ந்த அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். இரு நாட்களாக வையாவூரில் ஒருவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி என, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வையாவூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.இந்நிலையில், வையாவூரில் வயிற்றுப்போக்குக்கு காரணம், குடிநீரில் காலிஃபார்ம்' என்ற பாக்டீரியா தொற்று இருந்தது என, ஆய்வகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர். குடிநீரின் ஆய்வக அறிக்கையின் முழு விபரம், இன்று இரவுக்குள் மின்னஞ்சல் வழியாக அனுப்புவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ