| ADDED : ஜூலை 17, 2024 09:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, வெளியூர், உள்ளூர் என, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இம்மருத்துவமனைக்கு அரசு பேருந்துகளில் வருவோர், மருத்துவமனை வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயல்கின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு பேருந்துகள் புற்றுநோய் மருத்துவமனை வாசலில் நிற்காமல் செல்கின்றன.அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி எதிரிலும், பொன்னேரிக்கரை சந்திப்பிலும் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்பதால், பயணியர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.ஏற்கனவே, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, மருத்துவமனை வாசலில் பேருந்துகளை நிற்க அறிவுறுத்தி உள்ளனர்.ஆனால், அரசு பேருந்துகள், புற்றுநோய் மருத்துவமனை வாசலில் உள்ள நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.மருத்துவமனை நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.