உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல பகுதிகளில் உள்ள 178 இருளர் குடும்பத்தினருக்கு, 8.22 கோடி ரூபாய் செலவில், ஏற்கனவே மலையாங்குளம் கிராமத்தில், வீடுகள் கட்டி குடியமர்த்தப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து, 2024- - 25ம் ஆண்டுக்கு, உத்திரமேரூர் ஒன்றியத்தில், காரியமங்கலம், கருவேப்பம்பூண்டி, நாஞ்சிபுரம், பென்னலுார், பழவேரி உள்ளிட்ட கிராமங்களில், ஜன்மன் திட்டத்தின் கீழ், 77 குடும்பங்களுக்கு தலா 5.7 லட்சம் ரூபாய் செலவில், வீடு கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.இதே போல், ஆதவப்பாக்கம், சிலாம்பாக்கம், மானாம்பதி, பெருநகர், மருத்துவன்பாடி, குண்ணவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 73 குடும்பத்தினருக்கு, பழங்குடியினர் தொகுப்பு வீட்டு திட்டத்தின் கீழ், தலா 4.63 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது.வீடு கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெற்றதும், அக்குடியிருப்பு பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.