| ADDED : ஜூலை 16, 2024 12:52 AM
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் அடுத்த, சோண்டி கிராமத்தில் இருந்து, மதுரமங்கலம், ஏகனாபுரம், பரந்துார் ஆகிய கிராமங்களின் வழியாக, பள்ளூர் செல்லும் மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலை உள்ளது.இதில், மதுரமங்கலம் மேல்நிலைப்பள்ளி அருகே, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே திகழ்கிறது.இருப்பினும், ஆடு, மாடுகள் சாலையோரம் படுத்து விடுகிறது மற்றும் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களை, வழி மறித்து நிற்கின்றன.இதனால், மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, காந்துார் கிராமம் வரையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை; பண்ணுார் - கண்ணன்தாங்கல்; சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி ஆகிய பிரதான சாலைகளில் வாகனங்களை வழி மறித்து வந்த மாடுகள். தற்போது, கிராமப்புறங்களில் செல்லும் பிரதான சாலைகளையும் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளது.எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் வாகனங்களை வழி மறிக்கும் மாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.