திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூர், நெல்வாய் கண்டிகை, கீழ்வெம்பாக்கம் ஆகிய கிராமங்களில், 7,500 ஏக்கர் நிலப்பரப்பளவில், நெல் சாகுபடி செய்து உள்ளனர்.சமீபத்தில் பெய்து வரும், தென் மேற்கு பருவ மழையால், வயல்வெளியில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் நீரில் மூழ்கியது.குறிப்பாக, திருமால்பூர், நெல்வாய் கண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் நீரில் மூழ்கி உள்ளது.வயலில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி, மழைநீரை வெளியேற்றினர். தண்ணீர் வடிந்த நிலத்தில், நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைப்பு ஏற்பட்டுள்ளது.அனைத்து நெல் மணிகளும் முளைக்கும் முன், அறுவடை செய்து விடலாம் என, விவசாயிகள் நினைத்தனர். ஆனால், விட்டு விட்டு வரும் துாறலால், நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, திருமால்பூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர், நிலத்தில் சாய்ந்துவிட்டது. சாய்ந்த நெற்கதிர் முளைப்பு ஏற்படுவதற்கு முன், அறுவடை செய்துவிடலாம் என, நினைத்தாலும், தினசரி துாறல் மழையால் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இயந்திரத்தில் அறுவடை செய்தாலும், நெற்கதிர்கள் வீணாகிவிடும் சூழல் உள்ளது. துாறல் மழை நின்ற பிறகு தான் நெல் அறுவடை செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.