காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
காஞ்சிபுரம்,;மாவட்டத்தில், விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாட்பபட்டது. சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் களிமண் விநாயகர் சிலைகள் காஞ்சிபுரம் காந்தி சாலை, ரயில்வே சாலை, செங்கழுநீரோடை வீதி, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், சி.வி.ராஜகோபால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல், அதிகபட்சம் 500 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்கப்பட்டது.விநாயகர் குடைகள் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை குடைகள் விற்கப்பட்டன. சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு, விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தனககாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 19வது ஆண்டாக மூலவர் சன்னிதி முழுதும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், புத்தம் புதிய 1, 2, 10, 20, 50, 100, 200, 500 என, 20 லட்சத்திற்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் நகர இந்து முன்னணி சார்பில், 34வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஹிந்து எழுச்சி திருவிழா மற்றும் இந்து ஒற்றுமை விழா இந்து முன்னணி பேரியக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ். சந்தோஷ் மோகன், ஜே.ஞானவேல் ஆகியோர் தலைமையில் நடந்தது.இவ்விழாவில், மயில் வாகனத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் நகர ஹிந்து முன்னிணி சார்பில், நாளை காலை 9:30 மணிக்கு ரங்கசாமி குளக்கரையில் இருந்து விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் புறப்படுகிறது.காஞ்சிபுரம் திருக்காலிமேடு வீரசிவாஜி தெரு செல்வ விநாயகர், பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர் கோவில்களில், நேற்று, காலை 10:30 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது.சின்ன காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோவில் தெரு, அஸ்தகிரி தெரு, நைனா தெரு, சேதுராயர் தெரு, யதோக்தகாரி பெருமாள் கோவில் தெரு, ஏ.கே.டி., தெரு, அஷ்டபுஜ பெருமாள் தெற்கு மாட வீதி, சேக்குபேட்டை பி.எஸ்.கே., தெரு, வைகுண்டபுரம் தெரு, வணிகர் வீதி, வெள்ளைகேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் விநாயகப் பெருமான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.காஞ்சிபுரம் அடுத்த, மங்களபுரிக்ஷே த்திரம், கண்ணந்தாங்கல் 108 சக்திபீட கோவிலில் ஸ்வர்ண கணபதி சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இதில், கணபதி அதர்வஷிர்ஷ ஜபம், மஹா கணபதி ஹோமம் மற்றும் 16 திரவியங்கள் வாயிலாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காலை 7:00 மணி முதல், 11:30 மணி வரை நடந்தது. மாலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை கூழமந்தல் கிராமத்தில் ஏரிக்கரை அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று காலை நட்சத்திர விருட்ச விநாயகருக்கு விசேஷ கலச அபிஷேக ஆராதனை, சஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, விநாயகருக்கு உகந்த 21 வகையான இலைகள் அர்ச்சனைகளுடன் மஹா தீபாராதனை நடந்தது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, சித்தி, புத்தி காசி விநாயகர் கோவிலில் நேற்று, காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சித்தி, புத்தி விநாயகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
சிலைகள் கரைக்கஇரு இடங்களில் அனுமதி
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 307 விநாயகர் சிலைகள் அமைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.இந்த சிலைகளை கரைக்க, மாமல்லபுரம் கடற்கரை, பொன்னேரிக்கரை ஏரி மற்றும் அந்ததந்த பகுதிகளைச் சேர்ந்த ஏரிகளில் என, விநாயகர் சிலைகளை கரைக்க உள்ளனர்.குறிப்பாக, மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு, 26 சிலைகள் எடுத்து சென்று கரைக்க உள்ளனர். பொன்னேரிக்கரை ஏரி மற்றும் சர்வதீர்த்தகுளம் ஆகிய இரு இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்ட சிலைகளை, அந்தந்த ஏரிகளில் கரைக்க உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.