மாமல்லையில் கைநழுவுகிறது சுகாதார உணவு வீதி திட்டம்
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தில் ஓராண்டாக நீடிக்கும் நிர்வாக குளறுபடிகளால் திட்டப்பணி முடங்கியுள்ளது.இந்திய மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஆரோக்கியமான முறையில் சுற்றுலா பயணியருக்கு வழங்கும் வகையில், நாடு முழுதும் உள்ள 100 சுற்றுலா பகுதிகளில் உணவு வீதி திட்டத்தை செயல்படுத்த, கடந்தாண்டு மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது. ஆலோசனை
இதற்காக, தேசிய சுகாதார இயக்கம், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகம் ஆகியவற்றிடம் ஆலோசனை பெறப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்தை மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலும் செயல்படுத்த, ஓராண்டிற்கு முன் திட்டமிடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், 50 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நடமாடும் கடைகள், 200 மீ., சிமென்ட் கல் நடைபாதை, 10 நடமாடும் கழிப்பறை ஆகியவற்றுடன் தகவல் பலகை, கருங்கல் இருக்கை, சூரிய ஒளி விளக்குகள் போன்றவற்றை பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடற்கரை கோவில் அருகில், மத்திய அரசின் 'சுதேஷ் தர்ஷன் - 2.0' திட்டத்திலும், சுற்றுலா பயணியருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதனால், உணவு வீதி திட்டத்தை வேறிடத்தில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. பின், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சியை கருதி, இப்பகுதிக்கே மீண்டும் மாற்றப்பட்டது. முதல்கட்ட நிதியாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம், 24.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கடற்கரை அருகில் சிமென்ட் கல் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகளை துவக்க இருந்தது. ஆனால், திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட பகுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இடம். அந்த இடத்தில், பிற திட்டங்களை செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகத்தை அனுமதிக்க முடியாது என, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் நிராகரித்தது. சி.ஆர்.இசட்., விதிகள்
முக்கிய திட்டங்களை தொல்லியல் மற்றும் சி.ஆர்.இசட்., எனப்படும் கடலோர ஒழுங்கமைவு மேலாண்மை விதிகளில் கவனமின்றி திட்டமிடுவதாலும் நிர்வாக குளறுபடி தொடர்கிறது. முதலியார்குப்பம் சுற்றுலா வளர்ச்சி படகு குழாம் கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கட்டிய சாதாரண கழிப்பறை, சி.ஆர்.இசட்., விதிகள் காரணமாக இடிக்கப்பட்டது. எனவே, 'உணவு வீதி திட்டம் செயல்படுத்த உள்ள இடமும் கடற்கரை பகுதி என்பதால், சி.ஆர்.இசட்., அனுமதி பெற்றே செயல்படுத்த வேண்டும்' என, சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர் தெரிவித்தார். இந்த குளறுபடிகளால், திட்டத்தை வேறிடத்திற்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.