| ADDED : ஆக 22, 2024 11:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், 2011ல் அண்ணா நுாற்றாண்டு விழாவையொட்டி 2.50 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.இப்பூங்காவில், அழகிய பூச்செடிகள், புல்தரை, டைல்ஸ் பதித்த நடைபாதை, சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று, இரு பாலருக்கும் தனித்தனி கழிப்பறை அமைக்கப்பட்டது.பிள்ளையார்பாளையம் மட்டுமின்றி காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்கும் இடமாக பூங்கா இருந்து வந்தது.இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், செயற்கை நீருற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களான சீசா, சுற்று விளையாட்டு, அமரும் இருக்கை, மின்விளக்குகள் பல பழுதடைந்துள்ளன. பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே களைச்செடிகள் முளைத்துள்ளன. இதனால், பூங்காவை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, பூங்காவில் மண்டி கிடக்கும் தேவையற்ற செடிகளையும், பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவற்றை பழுதுநீக்கம் செய்து பூங்கா முழுதும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.