இருங்காட்டுக்கோட்டை பள்ளி மூடியே கிடப்பதால் கட்டடங்கள் வீண்
இருங்காட்டுக்கோட்டை : -ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில், அரசு தொடக்கப்பள்ளி 1940ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஐந்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள், ஆறாம் வகுப்பு சேர, ஸ்ரீபெரும்புதுார் அல்லது தண்டலம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. மாணவர்கள் வசதிக்காக இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக 2014ல் தரம் உயர்த்தப்பட்டது.இதையடுத்து, துவக்கப் பள்ளியில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில், 1.87 ஏக்கர் இடத்தில், ஐந்து வகுப்பறைகள், கழிப்பறை,சுற்றுச்சுவர் அமைத்து, நடுநிலைப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 2015ல் திறக்கப்பட்டது.புதிய கட்டடத்தில், 6 - 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சில நாட்கள் மட்டும் வகுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், துவக்க பள்ளி கட்டடத்திற்கு நடுநிலைப் பள்ளி மீண்டும் மாற்றப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இதனால், தொடக்கப்பள்ளி கட்டடம் இடநெருக்கடியாக உள்ளது.நடுநிலைப் பள்ளி கட்டடம் ஒன்பது ஆண்டுகளாக பயன் படுத்தப்படாமல் மூடியே கிடப்பதால் கட்டடங்கள் சேதமாகி வருகிறது. பள்ளி கட்டடம்மது அருந்தும் இடமாக மாறிவிட்டது.இடவசதி உள்ள இந்த பள்ளி கட்டடத்தை திறந்து, மீண்டும் பள்ளியை செயல்படுத்த வேண்டும் என, பெற்றோர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.