| ADDED : ஆக 06, 2024 02:03 AM
காஞ்சிபுரம்:பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரை ஒட்டி செல்கிறது. காஞ்சிபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தாமல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். நீர்வள ஆதாரத்துறையினர் ஆண்டுதோறும் வேகவதி ஆற்றை சீரமைக்கின்றனர். ஆனால், மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்டு ஆறு மாசடைகிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்வள ஆதாரத் துறை, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள துவங்கிஇருக்கிறது.திருப்பருத்திக்குன்றம் முதல், முத்தியால்பேட்டை வரை ஆறு பகுதிகளாக பிரித்து, ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. மழைக்குள் ஆற்றின் பெரும்பகுதி சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1,400 ஆக்கிரமிப்பு வீடுகள்
வேகவதி ஆற்றை நீர்வள ஆதாரத் துறையினர் ஆண்டுதோறும் சுத்தம் செய்கின்றனர். ஆனால், ஆற்றுக்குள் உள்ள 1,400 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், இந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். தாமல் ஏரி உபரி நீரும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.