| ADDED : ஜூலை 08, 2024 05:21 AM
உத்திரமேரூர்: கிராமங்களில் தனியார் தொழிற்சாலை இயங்கும் பட்சத்தில், அத்தொழிற்சாலை நிறுவனம் மூலம் தொழில் வரி, சொத்து வரி மற்றும் உரிமம் கட்டணம் புதுப்பிப்பு போன்ற வரிகளை ஆண்டுக்கு ஒரு முறை ஊராட்சிக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும். இந்த வரி வசூல் ஊராட்சியின் வருவாய் ஆதாரத்தை பெருக்க வழிவகுக்கிறது.உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதிபட்டிணம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இயங்குகிறது.இத்தொழிற்சாலையில், 2023- - 24ம் ஆண்டுக்கான சொத்து வரி 13 லட்சம் ரூபாய் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், இதுகுறித்து அத்தொழிற்சாலை நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:அமராவதிபட்டணம் கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலைக்கான 2023- - 24ம் ஆண்டுக்கான சொத்து வரி, 13 லட்சம் ரூபாய் இதுவரை செலுத்தப்படவில்லை.இதுகுறித்து வரி கேட்பு நோட்டீஸ், தொழிற்சாலைக்கு நேரில் அளித்தும், சொத்து வரி செலுத்த முன்வரவில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தும்பட்சத்தில் அடுத்த கட்ட ஜப்தி உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஊராட்சிகளுக்கு முறையாக சொத்து வரி செலுத்தாமல் டிமிக்கி கொடுக்கும் இவ்வாறான தனியார் தொழிற்சாலைகள் மீது, மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.