கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விமரிசை
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் நேற்று, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அனந்தஜோதி தெருவில், நவநீத கிருஷ்ணர், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு கோமாதா பூஜையும், 8:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது.மாலை 3:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நவநீத கிருஷ்ண பகவான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரவு 7:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, நாயகன்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வேணுகோபால சுவாமி குழந்தை வடிவமாக தொட்டிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வேணுகோபால சுவாமி உபயநாச்சியருடன் வீதியுலா வந்தார்.காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில், நேற்று காலை, கிருஷ்ணர் வெட்டி வேர் மாலை சாற்றிக் கொண்டு, மாடு கன்றுகளுடன் ஏணி மேல் ஏறி வெண்ணெயை அடிப்பது போல, ஏணி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள நந்த கிருஷ்ணா பக்த பஜனை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, சுவாமி வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு உறியடியும், இரவு 8:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.சின்ன காஞ்சிபுரம் அமுதுபடி தெரு 41வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று, காலை 10:00 மணிக்கு கிருஷ்ண பகவான் பந்தலுக்கு எழுந்தருளினார். மதியம் 1:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர் வீதியுலா வந்தார். மாலை 4:30 மணிக்கு உறியடியும், தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்வும், இரவு 7:30 மணிக்கு மஹாதீபாராதனையும் நடந்தது.