மேலும் செய்திகள்
பெண்கள் சாதனைக்கு பின் இருப்பது ஆண்களே!
09-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாட வீதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். மாட வீதிகளில் வசிப்போரின் வீடுகள், ஏகாம்பரநாதர் கோவில் பெயரில் தவறுதலாக பதிவாகி விட்டதாகவும், இந்த பிழையால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, எங்கள் சொத்தை உரிமை கோர முடியவில்லை என, மாட வீதியில் வசிப்போர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாட வீதிகளில் வசிப்போர், 1896 ம் ஆண்டிலேயே, தனித்தனி சர்வே எண்களுடன், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த 1968 ல், வருவாய் துறையில் நடந்த குளறுபடியால், தங்களது சொத்து விபரங்கள், கோவில் பெயரில் தவறாக பட்டா வழங்கி இருப்பது, அதன்பின் தான் தெரிய வந்ததாக புகார் தெரிவிக்கின்றனர்.கோவில் பெயரில் தவறாக மாறிய தங்கள் சொத்து விபரங்களை இன்று வரை மாற்ற முடியவில்லை என்கின்றனர்.இதுகுறித்து ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதிகள் மற்றும் ஏகாம்பரபுரம் வீதி வாழும் மக்கள் நல சங்கத்தின் செயலர் ஏகாம்பரம் கூறியதாவது :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு மாட வீதிகளில் வசிப்போர் மற்றும் ஏகாம்பரபுரம் வீதியில் வசிக்கும் குடும்பங்கள் இப்பிரச்னையில் சிக்கியுள்ளனர். எங்கள் மூதாதையர், 1896 ம் ஆண்டிலேயே, சொத்து பத்திரங்களுடன், தனித்தனி சர்வே எண்களுடன், பட்டா பெற்று, நகராட்சிக்கு வரி கட்டி வந்தோம்.எங்களுடைய பூர்வீக சொத்துக்களில் எங்கள் பகுதியினருக்கு, 1968 வரை எந்தவித சிக்கலும் இல்லை. அதன்பின் வருவாய் துறையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, சிறப்பு தாசில்தார் வாயிலாக, ஏகாம்பரநாதர் கோவில் பெயரில் எங்கள் சொத்துக்கள் பட்டா மாற்றப்பட்டது எங்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு பின்தான் தெரியும். அனைத்து ஆவணங்களுன் எங்கள் பெயரில் இருந்தபோதும், கோவில் பெயரில் பட்டா மாறியது எப்படி என, சரியான பதில் கிடைக்கவில்லை. எங்கள் பெயரில் பட்டா மாற்றி தர அமைச்சர், கலெக்டர் அனைத்து தரப்பினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 1968ம் ஆண்டுக்கு முன்பாக, எங்கள் பகுதியில் வசிப்போர் வீடு கட்ட, காஞ்சிபுரம் நகராட்சியில் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.கோவில் நிலமாக இருந்தால், கட்டட அனுமதி தர மாட்டார்கள். பட்டாவாக இருந்ததால் தான் எங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டது. இத்தனை ஆவணங்கள் இருந்தும் எங்கள் பெயரில் பட்டாவை திருத்தம் செய்து தர மறுப்பது வேதனையாக உள்ளது. எங்கள் சொத்துக்களை கோவில் நிலம் என்கிறார்கள். கோவில் நிலம் என்பதற்கு தேவையான ஆவணங்கள் கோவில் நிர்வாகத்திடமே இல்லை. 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் எங்களிடம், எங்கள் சொத்துக்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், எங்களது சொத்துக்களுக்கு உரிமை கோர முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
09-Mar-2025