குடிநீர் பணியால் சேதமான சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில், கடந்த ஜன., மாதம் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வழிந்தோடியது.அதை தொடர்ந்து வெளியேறிய குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் சாலையும் சேதமடைந்தது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் சார்பில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில், பள்ளம் தோண்டப்பட்டு குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.இருப்பினும், பள்ளம் தோண்டப்பட்டு, சாலை சேதமடைந்த இடத்தில், தார் கலவை வாயிலாக சீரமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்து ஜல்லிகள் கற்கள் சிதறி கிடக்கும் பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால் சேதமடைந்த சாலையை தார் கலவை வாயிலாக சீரமைக்க, ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.