உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் காஞ்சிபுரம் மேயர் பதவி நீடிப்பாரா?

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் காஞ்சிபுரம் மேயர் பதவி நீடிப்பாரா?

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பு, கமிஷனர் செந்தில்முருகன் தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை, கமிஷனர் செந்தில்முருகன், அண்ணா அரங்கத்தில் நேரடியாக பார்வையிட்டு, நேற்று ஏற்பாடு செய்தார். மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில், தி.மு.க.,- 33, அ.தி.மு.க., - 9, சுயேச்சைகள் - 5, பா.ம.க., - 2, பா.ஜ., மற்றும் காங்., தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர்.

பிரச்னை

இதில், 33 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கமிஷனர் செந்தில்முருகனிடம் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம், இன்று நடைபெற உள்ளது.கடந்த ஆறு மாதங்களாகவே, மேயர் மகாலட்சுமிக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்னை நீடித்து வந்தது.கவுன்சிலர்களை அமைச்சர் நேரு, அன்பகம் கலை, மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் அழைத்து பேசினர்.இருப்பினும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது, கமிஷனரை முற்றுகையிடுவது, பதவிகளை ராஜினாமா செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.இன்று நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடைபெறும் நிலையில், அதிருப்தியில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள், தங்களது குடும்பத்துடன் நேற்று முன்தினம் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். உடன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரும் தங்கியுள்ளனர்.தி.மு.க.,- - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என, 20க்கும் மேற்பட்டோர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, முதலியார்குப்பம் படகு குழாமில், ஜாலியாக படகு சவாரி செய்யும் படங்கள், நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகின.அதிருப்தி கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றிருப்பதால், இன்று நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு வருவார்களா என, கேள்வி எழுந்துள்ளது.

தோல்வி

மேயர் தரப்புக்கு ஆதரவான 13 கவுன்சிலர்களும், இக்கூட்டத்திற்கு வரப்போவதில்லை என, தகவல் வெளியாகியுள்ளது.மேயர் பதவியிலிருந்து அவரை நீக்க, 41 கவுன்சிலர்கள் எதிராக ஓட்டளிக்க வேண்டும். ஆனால், 41 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்து, மேயர் பதவியில் மகாலட்சுமி தொடர்வார் என, மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

விண்ணப்பித்த 33 கவுன்சிலர்கள்

தி.மு.க.,: அஸ்மா பேகம், இலக்கியா, பிரியா குழந்தைவேலு, குமரவேல், சசிகலா, மல்லிகா, சர்மிளா, கமலக்கண்ணன், குமரன், சாந்தி, சோபனா, ரமணி, சுதா (எ) சுப்புராயன், சரளா, மோகன், கார்த்திக், சங்கர்.அ.தி.மு.க.,: ஜோதிலட்சுமி, சண்முகநாதன், மெளலி, புனிதா, சிந்தன், சாந்தி, பிரேம்குமார்சுயேச்சைகள்: சாந்தி, ஷாலினி, அன்பழகன், பானுப்பிரியா, கயல்விழிபா.ம.க.,: சரஸ்வதி, சூர்யாகாங்கிரஸ்: குமரகுருநாதன் - துணை மேயர்பா.ஜ.,: விஜிதா

மேயர் ஆதரவு கவுன்சிலர்கள்

தற்போதைய சூழலில், 51 கவுன்சிலர்களில், தி.மு.க., - 19, அ.தி.மு.க., - 7, சுயேச்சை - 5 பா.ம.க., - 2 காங்., மற்றும் பா.ஜ., ஒரு கவுன்சிலர் என, 35 பேர் வெளிப்படையாக மேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.மீதமுள்ள 16 கவுன்சிலர்களில், மேயருக்கு ஆதரவாக 13 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர் விமலாதேவி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அகிலா, வேலரசு ஆகிய மூன்று கவுன்சிலர்களின் நிலைப்பாடு, இதுவரை தெரியவில்லை.இந்த மூன்று கவுன்சிலர்களும், மேயருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பார்களா அல்லது எதிர்த்து ஓட்டளிப்பார்களா என்பது, இன்று தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை