| ADDED : ஜூலை 17, 2024 11:46 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய கிராம பகுதிகளில், கடந்த நவரை பருவத்திற்கு, 27 ஆயிரம்ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்தனர். அப்பயிர்கள் அறுவடையை தொடர்ந்து, சொர்ணவாரி பருவத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரையிலான கணக்கில், 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.அப்பயிர்கள் தற்போது கதிர் வந்த நிலையிலும், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளன. இந்நிலையில், சில நாட்களாக உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழைப்பொழிவு ஏற்படுகிறது.இவ்வாறு நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக அரும்புலியூர், கரும்பாக்கம், சாத்தணஞ்சேரி, மலையாங்குளம், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் வந்த நிலையிலான நெல்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து உள்ளன. மீண்டும் மழை பெய்தால் அப்பயிர்கள் சேதமாகி மகசூல் பாதிக்கும் என அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து உத்திரமேரூர் வட்டார வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விவசாயிகள் நெல் பயிருக்கு உரமிடுவதில் யூரியா பயன்பாட்டு அளவு அதிகரிப்பால் பயிர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றன.அவ்வாறு உயரமாக வளர்ந்த நெல் பயிர்கள் சிறுமழைக்கே தாழ்ந்து நிலத்தில் சாய்கின்றன. அடுத்தடுத்து மழை பெய்யவில்லை எனில் அப்பயிர்கள் எளிதாக எழுச்சி பெற்று அறுவடை செய்துவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.