சென்னை : தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன், பட்டினப்பாக்கம், முள்ளி மாநகரில் தன் தேர்தல் பிரசாரத்தை நேற்று துவங்கினார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்கள் துாவியும் உற்சாகமாக வரவேற்றனர். பட்டினப்பாக்கம், சர்ச் அருகே நின்று கொண்டிருந்த கிறிஸ்துவ மக்கள், வேட்பாளர் ஜெயவர்தனை மாதா சர்ச்சுக்கு அழைத்து சென்று மெழுகுவர்த்தி ஏற்றி, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். அங்கிருந்த மீன் மார்க்கெட்டில், மீனவர்கள் மலர் துாவி உற்சாகமாக வரவேற்றனர். இரட்டை இலையை குறிக்கும் வகையில், வேட்பாளர் ஜெயவர்தன் கையில் இரண்டு மீன்களை கையில் கொடுத்து, எங்கள் ஓட்டு ஜெயவர்தனுக்கே என கோஷமிட்டனர்.பின், மயிலாப்பூர் தொகுதியில் உள்ள லாசர் சர்ச் சாலையில் உள்ள, தென்சென்னை லோக்சபா தலைமை தேர்தல் பணிமனையை, தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா திறந்து வைத்தார். அதன் பின்னர், அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தன் வேட்புமனுவை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நேற்று தாக்கல் செய்தார்.அவருடன் அவரது தாயார் ஜெயகுமாரி, தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா, மாவட்ட செயலர்கள் வி.என்.ரவி, எம்.கே.அசோக், தி.நகர் சத்தியா, கே.பி.கந்தன், கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க.,வின் மாவட்ட செயலர் பழனி மற்றும் ஆனந்தன், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., - பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அம்மா 'சென்டிமென்ட்'
தென் சென்னை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன், அம்மாவின் ஆசியுடன் நேற்று, வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு முன் நடந்த தேர்தல், கல்லுாரி மேற்படிப்புக்கு விண்ணப்பம் உட்பட எந்த நிகழ்வாக இருந்தாலும், தாயின் துணையுடனே ஆரம்பித்தார்.