காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:நாட்டின் முக்கியமான நகரங்களில் அடிப்படை வசதியை மேம்படுத்த மத்திய அரசு, 2015ல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை கொண்டு வந்து, மத்திய - மாநில அரசுகள், தலா 500 கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில் ஏற்கனவே திண்டுக்கல், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருப்பூர் வேலுார் உள்ளிட்ட 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், நாட்டின் புகழ்மிக்க கோவில் நகரமாகவும், பாரம்பரிய நகரமாகவும், சென்னை பெருநகரத்தின் துணை நகரமாகவும் விளங்கி வரும், காஞ்சிபுரம் நகரை 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் தேர்வு செய்யவில்லை.தற்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்வு பெற்று, புதிதாக பகுதிகள் இணைக்கப்பட்டு மிகப்பெரிய மாநகராட்சியாக மாறியுள்ளதால், மக்கள் தொகையும் பெருகியுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் கூடுதலாக தேவைப்படுகிறது.மத்திய அரசு காஞ்சிபுரத்தை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு செய்தால் தரமான சாலை, அழகிய நடைபாதை, பயணியர் தங்குவதற்கான விடுதி, நீர்நிலை அழகுப்படுத்துதல், அடுக்குமாடி வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும்.எனவே, நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தை, 'ஸ்மார்ட் சிட்டி'யாக தேர்வு செய்ய எங்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.