பழையசீவரம் மலை நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் பாலாற்றங்கரை ஒட்டி திருமுக்கூடல், புல்லம்பாக்கம், மதுார், சிறுதாமூர், சிறுமையிலுார் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களை சேர்ந்தோர், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம் மற்றும் சென்னை புறநகர் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும் தடம் எண்: 212பி., அரசு பேருந்து மட்டுமே இந்த நிறுத்தத்தில் நின்று செல்கிறது. தடம் எண்: 212எச் மற்றும் கல்பாக்கத்தில் இருந்து வரும் தடம் எண்: 157 ஆகிய அரசு பேருந்துகள் வழி நில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணியர், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, பழைய சீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து வகை அரசு பேருந்துகளும் நிறுத்தம் செய்து இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.