| ADDED : ஜூன் 29, 2024 01:22 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வணிகர் வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மட்டுமின்றி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், மரச்செக்கு எண்ணெய் கடைகள், தனியார் மருத்துவமனை, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் நுழைவாயிலில், அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதால், அப்பகுதி குப்பை குவியலாக மாறியுள்ளது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக அகற்றாததால், துர்நாற்றம் வீசி வருகிறது.காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் முகம் சுளித்தபடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.எனவே, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் நுழைவாயிலில் கொட்டப்பட்டுள்ள குப்பையை முழுதும் அகற்றவும், அப்பகுதியில் குப்பை கொட்ட தடைவிதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.