| ADDED : ஆக 17, 2024 07:53 PM
காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல், சென்னை மாநகர பேருந்து பயண அட்டை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறை உள்ளது.இவற்றில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்ய சிரமமாக உள்ளதால், சென்னை மாநகர பேருந்து பயண அட்டை தேவைப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.வரும் 20 - 23ம் தேதி வரை, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது.இந்த 4 நாட்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.