சென்னை மாநில அளவிலான 'ரக்பி' கால்பந்து போட்டியில் இரு பிரிவில், திருவள்ளூர் மாவட்ட அணிகள் முதலிடங்களை பிடித்து அசத்தின.தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் மற்றும் ஆர்.எம்.கே., இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மாநில ரக்பி கால்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்தது.இப்போட்டியில், 18 வயது இருபாலர் பிரிவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்றன.சீனியர் ஆண்கள் பிரிவில் தமிழக போலீஸ், சென்னை, சிவகங்கை உட்பட எட்டு அணிகளும், பெண்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடத்தப்பட்டன.சீனியர் பெண்கள் சென்னை மாவட்ட அணி, 15 - 5 என்ற கணக்கில், திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.செங்கல்பட்டு மூன்றாம் இடத்தை பிடித்தது.சீனியர் ஆண்கள் பிரிவில் தமிழக போலீஸ் முதலிடத்தையும், சென்னை மற்றும் செங்கல்பட்டு அணிகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றன.அதேபோல், 18 வயது சிறுமியர் பிரிவில், திருவள்ளூர் அணி, 10 - 5 என்ற கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, முதலிடத்தைக் கைப்பற்றியது.திருப்பத்துார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தை வென்றது.இதே பிரிவில், சிறுவர்களில் திருவள்ளூர் அணி, 20 - 10 என்ற கணக்கில், சென்னை மாவட்டத்தை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.