| ADDED : ஜூலை 28, 2024 04:45 AM
சென்னை : தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில், அகில் இந்திய டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., அரங்கில் நடந்து வருகின்றன.இதில், தமிழக வீரர்கள் உட்பட ஏராளமான முன்னணி வீரர், வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். நேற்று, இரு பாலருக்கான ஓபன் சக்கர நாற்காலி போட்டி நடந்தது. ஆண்களில் 21 பேரும், பெண்களில் ஒன்பது பேரும் பங்கேற்றனர்.விறுவிறுப்பான ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்களில்,தமிழக வீரர்களான கார்த்திக், மாரியப்பன் ஆகியோர் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அதேபோல், பெண்களில் கர்நாடகாவைச் சேர்நத பிரதிமா ராவ் மற்றும் ஷில்பா ஆகியோர் தகுதி பெற்றனர். ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி போட்டியில், தமிழக வீரர் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6 - 2, 6 - 0 என்ற கணக்கில் மாரியப்பனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.பெண்களில், பிரதிமா ராவ், 6 - 2,7 - 5 என்ற கணக்கில் ஷில்பாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.