மின்விளக்கின்றி அண்ணா பூங்கா பராமரிப்பில் மாநகராட்சி அலட்சியம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், மாநகராட்சி கட்டுப்பாட்டில், அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா உள்ளது. நகரவாசிகளின் ஓய்வு இடமாகவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்ற இடமாக இந்த பூங்கா உள்ளது.இப்பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையிலும், இருக்கைகள் சேதமாகியும் பராமரிப்பு இன்றி இருப்பதாக, மாநகராட்சி கவனத்திற்கு நகரவாசிகள் பலமுறை கொண்டு சென்றனர்.இந்நிலையில், சமீப நாட்களாக, பூங்காவில் மின் விளக்குகளும் எரிவதில்லை. இரவு 8:00 மணி வரை, பொதுமக்கள் பூங்காவில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், மின் விளக்குகள் கூட எரியாததால், குழந்தைகள், 6:00 மணிக்கே வெளியேறுகின்றனர்.முதியோர், பெற்றோரால் பூங்காவிற்குள் செல்ல அச்சம் தெரிவிக்கின்றனர். விஷ ஜந்துக்கள் புகலிடமாகவும் இப்பூங்கா மாறியுள்ளது. மின்விளக்குகளை சரிசெய்வதோடு, விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.