| ADDED : ஜூலை 10, 2024 12:56 AM
தாம்பரம்:நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சந்தியா, 38. திருச்சியில் உள்ள இந்திரா கல்லுாரியில் தங்களது மகளை பி.காம்., படிப்பில் சேர்க்க, தம்பதி தமிழகம் வந்தனர்.மகளை கல்லுாரியில் சேர்த்து விட்டு, 'எஸ்.ஆர்., டிராவல்ஸ்' என்ற தனியார் ஆம்னி பேருந்தில், நேற்று காலை தாம்பரம் வந்திறங்கினர். பேருந்து புறப்பட்ட சற்று நேரத்தில், பையை தவறவிட்டது தெரிந்தது. அதில் 10 சவரன் நகை, 10,000 ரூபாய், 'பேன் கார்டு, ஆதார் கார்டு' உள்ளிட்டவை இருந்தன.ஓட்டுனருக்கு போன் செய்து கூறியுள்ளனர். அதற்கு அவர், 'பேருந்தில் பை ஒன்றும் இல்லை' எனக் கூறியுள்ளார்.இது குறித்து தாம்பரம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார், பேருந்து ஓட்டுனரான, அரியலுார் மாவட்டம், மேலவண்ணத்தை சேர்ந்த வெங்கடேசன், 27, என்பவரிடம் விசாரித்தனர்.இதில், நகை பையை திருடியது ஒப்புக்கொண்டார். நகை பையை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.