சென்னை : சென்னை, புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனி, நான்காவது தெருவில் வசிப்பவர் ஜோஸ்வா டேனியல் கிளியோபஸ் ஜெரால்டு, 12. இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஜான் பெட்ரிக் என்பவரின் வெளி நாட்டைச் சேர்ந்த 'ராட்வைலர், பாக்சர்' இன நாய்கள், அவ்வழியே சைக்கிளில் சென்ற ஜெரால்டை கடித்துக் குதறின.சிறுவனின் காது, தாடை, மார்பு, முதுகு என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின்படி நாய்களை வளர்க்க, மாநகராட்சியிடம் அவர் பதிவு செய்யாதது, வீட்டுக்கு வெளியே பாதுகாப்பின்றி அவற்றை அழைத்து வந்தது என இரு பிரிவின் கீழ், அவற்றின் உரிமையாளர்கள் ஜான் பெட்ரிக், 54, அவரது மனைவி மெர்சி, 45, ஆகியோர் மீது, புழல் போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர். சிறுவனை கடித்த நாய்கள், 'புளூகிராஸ்' அமைப்பிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், கே.கே.நகர், ராமசாமி சாலையில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் துரைராஜ் மகன் அன்பரசு, 16. பிளஸ் 2 மாணவரான இவரை இதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகன், 38, என்பவர் வளர்க்கும் நாட்டு நாய், திடீரென ஓடி வந்து, நேற்று முன்தினம் இடது முழங்காலின் பின்புறம் கடித்தது.இதில் காயம் அடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னையில் தொடரும் நாய்க்கடி சம்பவத்தால், பொதுமக்கள் பதற்றம் அடைந்து வருகின்றனர். நாய்களை பார்த்தாலே கடித்துவிடுமோ என்ற பீதியில் தவிக்கின்றனர்.