| ADDED : ஜூலை 10, 2024 12:45 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை பேறு, கண், காது, மூக்கு, பல், பால்வினை, காசநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பல்வேறு கட்டடங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன.காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் மட்டுமின்றி மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என, தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பல்வேறு கட்டடங்களை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தில் அரச மர செடிகள் வளர்ந்து வருகினறன.உதாரணமாக ஆய்வகம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு தொடர்பு அலுவலகம், குடிநீர் தொட்டி எண் 12 அமைந்துள்ள கட்டடம், மின்மோட்டார் அமைந்துள்ள கட்டடம் உள்ளிட்ட கட்டட சுவரில் அரச மர செடிகள் செழித்து வளர்ந்து வருகின்றன.இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் கட்டடம் வலுவிழுந்து இடிந்து விழும் நிலை உள்ளது.எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவு கட்டடங்களில் வளர்ந்து வரும் அரச மர செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.