| ADDED : ஜூலை 16, 2024 11:42 PM
அயனாவரம், 'இன்ஸ்டா'வில் கத்திகளுடன், 'ரீல்ஸ்' வீடியோ பதிவு செய்த, மூன்று ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதள பக்கத்தில், ரவுடிகள் கத்திகளுடன் 'ரீல்ஸ் வீடியோ' வெளியானது. அதில், கானா பாடல் பின்னணியில் ஒலிக்க நான்கு வாலிபர்கள் இரு கத்திகளுடன் அமர்ந்திருந்த காட்சியும் இடம் பெற்றிருந்து. போலீசார் விசாரணையில், தலைமைச் செயலகம் மற்றும் அயனாவரம் காவல் எல்லையில் வீடியோ எடுத்து பதிவிட்டது தெரியவந்தது. அயனாவரம் தனிப்படை போலீசார் விசாரித்து, புரசைவாக்கத்தைச் சேர்ந்த சுண்டு என்ற சரவணன், 21, சதீஷ், 21, வசந்த், 24 ஆகிய மூன்று ரவுடிகளை நேற்று பிடித்தனர். அவர்களை விசாரித்த போது, மூவர் மீதும் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கத்திகளுடன் வீடியோ வெளியிட்டதை ஒப்புக்கொண்டனர். மூவரையும் கைது செய்த அயனாவரம் போலீசார், தலைமறைவான ஓட்டேரியைச் சேர்ந்த முயல்காது அப்பு என்ற சுரேஷ், 20 என்பவரை தேடி வருகின்றனர்.