| ADDED : ஜூலை 15, 2024 02:43 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை செல்வோர், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் மேம்பாலம் வழியாக சுற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில், தாமல்வார் தெரு வழியாக சென்று, ஏனாத்துார் புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலை, 5.5 மீட்டர் அகலம் இருந்ததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து, 2022ல், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.90 கோடி ரூபாய் செலவில், 5.5 மீட்டர் அகலம் கொண்ட சாலை, 7 மீட்டர் அகலத்திற்கு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தாமல்வார் தெருவில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது.குறிப்பாக சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, தாமல்வார் தெருவில், சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.