உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் ஜமாபந்தியில் 260 பேருக்கு நல உதவிகள்

வாலாஜாபாத் ஜமாபந்தியில் 260 பேருக்கு நல உதவிகள்

வாலாஜாபாத்:வருவாய் துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி, வாலாஜாபாத் ஒன்றியத்தில், கடந்த 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி நிறைவு பெற்றது.இதில், தென்னேரி, மாகரல், வாலாஜாபாத் ஆகிய குறுவட்டங்களுக்கு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மனுதாரர்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்தனர்.நேற்று காலை, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. 36 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, வகைப்பாடு மாற்றம் செய்து 40 பேருக்கு மனை பட்டா, கிராம கணக்கில் மாற்றம் செய்து 94 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.பத்து நபர்களுக்கு வேளாண் இடுபொருள்கள் எனவும், சாதி சான்று, வாரிசு சான்று, மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி, விதவை, முதியோர் என, மொத்தம் 260 பயனாளிகளுக்கு, 2.22 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது:வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ஏராளமானவர்கள் பட்டா மற்றும் பட்டா மாற்றம் கோரி மனு அளித்தனர். மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு, அதே இடத்தில் மனை பட்டா வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதற்கு மாற்றாக வேறு இடத்தில் பட்டா வழங்க, சில கிராமங்களில் அதற்கான இடம் இல்லாததால், பட்டா வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இதேபோன்று மகளிர் உரிமைத்தொகைக்கு ஏராளமானோர் மனு அளித்துள்ளனர். இதற்காக அரசு தனியாக இணையதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அதன் மூலம் விண்ணப்பித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பயன் அடையலாம் என தெரிவித்தார்.வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி