சான்றிதழ் கோரிய 10,000 விண்ணப்பங்கள்.. தேக்கம் எஸ்.ஐ.ஆர்., என போக்குகாட்டும் அதிகாரிகள்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பித்த, 9,813 மனுக்கள் பரிசீலிக்காமல் தேக்கம் அடைந்துள்ளன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை காரணம் காட்டி, வருவாய் துறை அதிகாரிகள் போக்கு காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பத்திர பதிவுகள் மூலம், ஆண்டுதோறும், 3,000 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. சொத்துக்கள் கிரையம் செய்யப்படும் சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யவும், உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து செய்யவும், ஏராளமானோர் வருவாய் துறைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, துணை தாசில்தாருக்கு மனுக்கள் அனுப்பப்படும். அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வார். அதுவே, நகர்ப்புறமாக இருந்தால், சர்வேயரிடம் இருந்த துணை தாசில்தாருக்கு மனு அனுப்பப்படும். உட்பிரிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என்றால், தாசில்தார் கையெழுத்திட்டு பட்டா வழங்க வேண்டும். இந்த நடைமுறை அனைத்தும் ஆன்லைனில் மாற்றப்பட்டு, பல ஆண்டுகளான நிலையில், மக்கள் அலைக்கழிக்கப்பட்டு பட்டா வழங்கப்படுகிறது. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள், கடந்த 4ம் தேதி முதல் நடக்கின்றன. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், துணை கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் என, வருவாய் துறையின் பெரும்பாலான அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணியில் வருவாய் துறையினர் கவனம் செலுத்துவதால், பட்டா தொடர்பான மனுக்கள் கிடப்பில் போடப்படுவதாக புகார் எழுகிறது. உட்பிரிவு செய்து பட்டா வழங்க பலரும், தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், வருவாய் துறை தொடர்பான பட்டா பெயர் மாற்றம், இடத்தை அளப்பது, உட்பிரிவு செய்து பட்டா தருவது என, பல வகையான கோரிக்கை தொடர்பாக, 9,813 மனுக்கள் நிலுவையில் உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள், துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், தாசில்தார்கள் என அனைத்து அதிகாரிகளிடமும் இந்த கோப்புகள் தேங்கி உள்ளன. இதனால், பட்டா பெயர் மாற்றத்திற்கு, தாலுகா அலுவலகங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கின்றனர். அதிகாரிகளிடம், தன் பட்டா கோப்புகள் என்னானது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடப்பதால், பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னும் கால தாமதம் ஆகும் என்ற பதிலே பொதுமக்களுக்கு கிடைப்பதால், பலரும் கவலை தெரிவிக்கின்றனர். பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோப்புகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, மனு அளித்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகாவில் பட்டா தொடர்பான மனுக்கள் தேங்கி கிடப்பதாக புகார் எழுந்தது. விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சப் - கலெக்டர் ஆஷிக்அலி தெரிவித்தார். ஆனால், நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பட்டா தொடர்பாக மனு அளித்தவர்கள் தெரிவித்துள்னளர். தாலுகா அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவது பற்றி காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலியிடம் கேட்டபோது, 'எஸ்.ஐ.ஆர்., பணியில் அனைத்து வருவாய் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமான பணிகள் குறைந்துதான் உள்ளது. என்ன செய்வது, இருப்பினும், வழக்கமான கோப்புகளை நாங்கள் பார்க்கிறோம். நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார். தேங்கியுள்ள மனுக்கள் விபரம் தாலுகா மனுக்கள் எண்ணிக்கை காஞ்சிபுரம் 1,922 ஸ்ரீபெரும்புதுார் 2,165 உத்திரமேரூர் 894 வாலாஜாபாத் 782 குன்றத்துார் 4,050 மொத்தம் 9,813