காஞ்சியில் புதிதாக அமையும் 144 ஓட்டுச்சாவடிகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலுக்காக, புதிதாக 144 ஓட்டுச்சாவடிகள் துவங்கப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீவிர வாக்காளர் திருத்த பணிகள், கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, டிசம்பர் 11ம் தேதிக்குள், ஓட்டுச்சாவடி நிலை அலு வலரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. 19ல் பட்டியல் அதைத் தொடர்ந்து, மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, 14ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் வழங்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. அதையடுத்து, டிசம்பர் 14ம் தேதி வெளியிட வேண்டிய வரைவு வாக்காளர் பட்டியல், வரக்கூடிய 19ம் தேதி வெளி யிடப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இரட்டை பதிவு, விண்ணப்பங்களை திரும்ப வழங்காதது, இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் என பல காரணங்களால் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, புதிய ஓட்டுச்சாவடி விபரங்களையும், தேர்தல் பிரிவு அதிகாரிகள் வெளியிட உள்ளனர். 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டும் என, வாக்காளர்களும், அரசியல் கட்சியினரும் தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். கள ஆய்வு அந்த ஓட்டுச்சாவடிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றை பிரிக்க தேவையான அறிக்கைகளை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 1,401 ஓட்டுச்சாவடிகள் தற்போது உள்ளன. இதில், பல தரப்பினரின் கோரிக்கை காரணமாக, காஞ்சிபுரம் தொகுதியில் 27, உத்திரமேரூர் தொகுதியில் 19, ஸ்ரீபெரும்புதுாரில் 68, ஆலந்துாரில் 30 என, 144 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே, 1,401 ஓட்டுச்சாவடிகளுடன், 144 இடங்களில் புதிதாக துவங்கப்பட்டால், 1,545 ஓட்டுச்சாவடிகளுடன், தேர்தல் நடை பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.