உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடகிழக்கு பருவமழை பாதிப்பை சமாளிக்க காஞ்சியில் 21 மண்டல குழுக்கள் அமைப்பு

வடகிழக்கு பருவமழை பாதிப்பை சமாளிக்க காஞ்சியில் 21 மண்டல குழுக்கள் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் துவங்கியுள்ளன. மழை, வெள்ளம் பாதிக்கும் 72 இடங்கள் கண்டறியப்பட்டு, 11 துறை அலுவலர்கள் இடம் பெற்ற, 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015ல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்தன. ஏராளமான மனித உயிரிழப்புகளுடன், கால்நடைகள் பல நீர்நிலைகளில் சிக்கி இறந்தன. இந்த மோசமான பாதிப்பு அடுத்த ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க, 2016 முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை சமாளிக்க, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், உணவு பொருட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும், அதிகாரிகளை கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கும், 72 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில், மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் மூன்று இடங்களும், அதிக பாதிப்புக்குள்ளாகும், 21 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. மழை பாதிப்பு இடங்களில் பணியாற்ற, 11 துறை அலுவலர்கள் இடம் பெற்ற, 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டல குழுவிலும், மின்வாரியம், போலீஸ், தீயணைப்பு, வருவாய் துறை, உள்ளாட்சி அலுவலர் என, 11 அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். பருவமழை தீவிரமடையும் நாட்களில், இந்த, 11 துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில், 24 மணி நேரமும் தயாராக இருப்பர். மழையால் பாதிக்கும் பொதுமக்களை மீட்கவும், முதலுதவி அளிக்கவும், இவர்கள் களத்தில் பணியாற்றுவர். இதுகுறித்து, மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: இந்தாண்டு வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மணல் மூட்டைகள், படகு, லைப் ஜாக்கெட், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம். மின்வாரியம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட துறையினரை, 24 மணி நேரமும் தயாராக இருக்க கூறியுள்ளோம். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடையை சீரமைப்பதுடன், மழைநீர் கால்வாய்களை துார்வாரும்படியும் கூறியுள்ளோம். மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம். அக்டோபர், 1ம் தேதி முதல், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். வேகவதியில் 300 வீடுகள் பாதிக்கும் அபாயம் காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் வேகவதி ஆற்றில், 1,400 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும் போது, நுாற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2021ல் பலரது வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்தாண்டு, 300 ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் என்ற அச்சம் நிலவுகிறது. அதற்கு முன்னதாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை