உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 60 காலி இடங்களில் 28 நிரம்பின வளர்ச்சி பணிகள் வேகம் பெறும்: மேயர்

காஞ்சியில் 60 காலி இடங்களில் 28 நிரம்பின வளர்ச்சி பணிகள் வேகம் பெறும்: மேயர்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 60 காலி பணியிடங்களில் ஒரே நாளில் 28 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதனால், வளர்ச்சி பணிகள் வேகம் பெறும் என காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், உதவி கமிஷனர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என, பல்வேறு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்றரை ஆண்டுகள் ஆன போதும், போதிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால், பணியாளர் பற்றாக்குறை காரணமாக மற்ற ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிப்பதாக, ஊழியர்கள் பலர் தெரிவித்து வந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, கமிஷனர், உதவி கமிஷனர்கள், பொறியாளர், உதவி பொறியாளர்கள், சுகாதார அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், உதவியாளர்கள் என, 23 வகையில், 102 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், 60 பணியிடங்கள் காலியாகவே இருந்தன. இந்நிலையில், மொத்த காலி பணியிடங்களில், 28 பணியிடங்கள், நேற்று முன்தினம் ஒரே நாளில் நிரப்பப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என, பல்வேறு நிலையிலான பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு காலியாக உள்ள, 60 பணியிடங்களில் உதவி பொறியாளர்கள் ஐந்து பேர், திட்டமிடல் பிரிவுக்கு உதவி பொறியாளர்கள் ஆறு பேர் என, பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 28 பணியிடங்கள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியதாவது: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மற்ற பணியிடங்கள் இடமாறுதலில் வர வேண்டும். உதாரணமாக, நகரமைப்பு ஆய்வாளர்கள் பணியிடங்கள் மூன்று காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு, வேறு மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும். ஆனால், புதிய நியமனங்களால், வளர்ச்சி பணிகளில் தொய்வு இருக்காது. இட மாறுதலில் வர வேண்டிய அதிகாரிகளை விரைவாக நியமிக்க, நகராட்சி இயக்குநரகத்திடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை