உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 55,000 புது குடிநீர் இணைப்புக்கு...ரூ.318 கோடி!:431 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்க திட்டம்

காஞ்சியில் 55,000 புது குடிநீர் இணைப்புக்கு...ரூ.318 கோடி!:431 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்க திட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், அடுத்த 10 ஆண்டுகளில், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பர் என்பதால், 318 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் துவங்க உள்ளது. இத்திட்டத்தில், மாநகராட்சியில், 431 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, புதிதாக 55,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயரும் முன்பாக, நகராட்சியாக செயல்பட்ட காலத்தில், 1961ம் ஆண்டில், ஓரிக்கை பாலாற்றில் இருந்தும், 1992ல், திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்தும், இரு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2.32 லட்சமாக உள்ளது.நகரில் வசிக்கும் 2 லட்சம் பேரில், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு, 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், மாநகராட்சிக்கே 23.5 மில்லியன் லிட்டர் தான் ஒரு நாளைக்கே கிடைப்பதால், ஒவ்வொருவருக்கும், 100 லிட்டர் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரின் 2035ம் ஆண்டுக்கான கணக்கீட்டின்படி, 59.0 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.இதனால், எதிர்க்கால தேவையை கணக்கிட்டு விரிவான திட்டம் தேவைப்படுவதால், உலக வங்கி நிதியுதவியுடன், புதிய குடிநீர் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது. இதற்கான, நிதி பெறப்பட்டு, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி முழுதும், குடிநீர் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2035ம் ஆண்டு, 4.36 லட்சம் பேர் வசிப்பார்கள் என, மாநகராட்சி அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். புதிதாக கோனேரிக்குப்பம், திருப்பருத்திக்குன்றம், கருப்படித்தட்டடை, கீழ்கதிர்பூர், சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கீழம்பி, புத்தேரி, களியனுார், வையாவூர், ஏனாத்துார் ஆகிய, 11 ஊராட்சிகள் இணைக்க, நகராட்சி நிர்வாகத் துறை திட்டமிட்டுள்ளது.இதனால், மாநகராட்சியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்பதால், 300 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடுக்கு காத்திருந்த நிலையில், உலக வங்கி நிதியுதவி செய்துள்ளது. அதன்படி, 318 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.ஏற்கனவே மாநகராட்சி முழுதும், குடியிருப்பு, வணிக ரீதியில் என, 32,687 குடிநீர் இணைப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. புதிய திட்டத்தின் கீழ், 55,000 குடிநீர் இணைப்புகள் மேலும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஏற்கனவே, 94 குடிநீர் தொட்டிகள் வாயிலாக, வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இத்திட்டத்தில் கட்டப்பட உள்ளன.நகரின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், லாரிகள் வாயிலாக அன்றாடம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகின்றன.கோடை காலத்தில், குடிநீர் தேவை அதிகரிக்கும் என்பதால், அதிகளவில் லாரிகளிலும் சப்ளை செய்யப்படுகின்றன. புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, ''குடிநீர் பணி செய்யும் நிறுவனத்திற்கு பணி ஆணை கொடுக்கப்பட்டு விட்டது. விரைவில் குடிநீர் பணிகள் துவங்கிவிடும். அதேபோல, பாதாள சாக்கடை திட்டமும், 39, 40 ஆகிய வார்டுகளில் துவங்கி நடக்கிறது. இரு திட்டமும் பணிகளும் திட்டமிட்டபடி நடக்கும்,'' என்றார்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:எதிர்கால குடிநீர் தேவைக்கு ஏற்ப குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடியிருப்புகள் குறைவாக உள்ள பகுதிகளிலும், குடிநீர் தொட்டிகள், பைப்லைன் ஆகியவற்றை அமைக்க உள்ளோம்.எதிர்காலத்தில் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமானால், குடிநீர் வசதிகளை உடனடியாக பெற, இது வழிவகை செய்யும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீருக்கான இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய குடிநீர் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் விபரம்

2011ல் மக்கள் தொகை 2,32,8162022ல் மக்கள் தொகை 2,76,3602035ல் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 4,36,042மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு தினமும் 59.0 மில்லியன் லிட்டர்தற்போது கிடைக்கும் குடிநீர் அளவு தினமும் 23.5 மில்லியன் லிட்டர்புதிதாக அமைக்கவுள்ள குடிநீர் சேகரிப்பு கிணறு 3புதிதாக அமைக்கவுள்ள நீர் உறிஞ்சும் கிணறு 6புதிதாக அமைக்கவுள்ள ஆழ்துணை கிணறு 5புதிதாக அமைக்கவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி 5புதிய பகிர்மான குழாய்கள் அளவு 431 கி.மீ.,புதிய பிரதான குழாய்கள் அளவு 34.2 கி.மீ.,புதிய குடிநீர் இணைப்புகள் 55,240


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை