தேர்தலுக்காக காஞ்சிபுரம் வந்த 598 விவிபேட் இயந்திரங்கள்
காஞ்சிபுரம்:அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக, பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து, 598 'விவிபேட்' ஓட்டு இயந்திரங்கள் நேற்று காஞ்சிபுரம் வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் வரக்கூடிய 2026ல் நடக்க உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற் கொள்ள துவங்கி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு, அறைகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மாதந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில், பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து, 598 'விவிபேட்' ஓட்டு இயந்திரங்கள் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தன. காஞ்சிபுரம் கலெக்டரின் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள கிடங்கில், இந்த 598 'விவிபேட்' ஓட்டு இயந்திரங்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.