உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடந்த 3 ஆண்டுகளில் 6,588 பேருக்கு புற்றுநோய் அதிர்ச்சி! அண்ணா புற்றுநோய் மருத்துவமனை ஆய்வில் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் 6,588 பேருக்கு புற்றுநோய் அதிர்ச்சி! அண்ணா புற்றுநோய் மருத்துவமனை ஆய்வில் தகவல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காரைப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில், 28 ,000 பேருக்கு பரிசோதனை செய்ததில், 6,588 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது . மேலும், 220 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டடம், 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில், கடந்த 1,969ல் தமிழக அரசு சார்பில் அரசு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.இம்மருத்துவமனை வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற ஏதுவாக அமைக்கப்பட்டது.தமிழக அரசின் சுகாதாரத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு என, வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்தோர் சிகிச்சை பெறுகின்றனர். கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த வெளிமாநில நோயாளிகள் சிலரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மருத்துவமனையில், 290 படுக்கை வசதியுடன், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

750 படுக்கை வசதி

இங்கு, போதிய இடவசதியில்லாததால், தற்போதைய மருத்துவமனை அருகே, நான்கு அடுக்கு கொண்ட புதிய மருத்துவமனை கட்ட, முதலில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.பின், மேலும் 100 கோடி ரூபாய் என, மொத்தம் 220 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இங்கு, 750 படுக்கை வசதியுடன் சகல வசதியுடன் கூடிய புற்றுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு புற்றுநோய் அறிகுறியுடன் வரும் நோயாளிகள் தவிர, சுற்றியுள்ள கிராமப்புறங்களில், மருத்துவமனை சார்பில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை பல ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையில், புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்பட்ட உடல் உறுப்பிலிருந்து சதை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து, புற்றுநோயை மருத்துவர்கள் உறுதிபடுத்துகின்றனர். அவ்வாறு, மூன்று ஆண்டுகளில் மட்டும், 28,511 பேருக்கு பரிசோதனை செய்ததில், 6,588 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், காரைப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோய் உறுதியானவர்களுக்கு, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுகிறது.அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், மூன்று ஆண்டுகளில், 10,574 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை

இம்மருத்துவமனை மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், ஆண்டுதோறும் சராசரியாக 2,000 பேருக்கு மேலாக புற்றுநோய் கண்டறியப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அண்ணா புற்றுநோய் மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், வந்தவாசி, வாலாஜா, அரக்கோணம் என, பிற மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் மருத்துவர்கள் வாயிலாக முகாமிட்டு பரிசோதனை செய்கிறோம்.புற்றுநோய் அறிகுறி இருந்தால், நோயாளிகளுக்கு தெரிவித்து, உரிய சிகிச்சை எடுக்க வலியுறுத்துகிறோம். மருத்துவர்கள் பரிசோதனையில், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் அதிகளவு இருப்பது தெரிகிறது.ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகளவு உள்ளது. புகையிலை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பாதிக்கின்றனர்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும், மார்பக புற்றுநோயையும் கண்டறியும் மேமோகிராபி ஸ்கிரீனிங், வீடியோ அசிஸ்ட்டட் கால்போஸ்கோபி ஆகிய இரு பரிசோதனைகளும் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்கிறோம்.புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால், கூடுதலாக பல வசதிகளும், சேவைகளும் கிடைக்கும். கூடுதலாக ஊழியர்களை கேட்டுள்ளோம். புதிய மருத்துவமனை கட்டடம் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கிடைக்கும்!

புதிய மருத்துவமனை கட்டடம், 750 படுக்கை வசதிகளுடன் அமைகிறது. இதில், 40 படுக்கைகள் கட்டண முறையில், சிறப்பு படுக்கை வசதியோடு அமைகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிறப்பு வார்டுகளும் அமைகிறது. குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை, இம்மருத்துவமனையில் இதுவரை இல்லை. புதிய கட்டடத்தில், குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அதேபோல், ரத்த புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளும் புதிய கட்டடத்தில் வழங்கப்பட உள்ளது. புதிதாக இரண்டு அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரங்களும் அதில் பொருத்தப்பட உள்ளது. நவீன லாண்டரி, சமையலறை போன்ற வசதிகளும் அமைக்கப்படுகிறது.

கிடைக்கும்!

புதிய மருத்துவமனை கட்டடம், 750 படுக்கை வசதிகளுடன் அமைகிறது. இதில், 40 படுக்கைகள் கட்டண முறையில், சிறப்பு படுக்கை வசதியோடு அமைகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிறப்பு வார்டுகளும் அமைகிறது. குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை, இம்மருத்துவமனையில் இதுவரை இல்லை. புதிய கட்டடத்தில், குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அதேபோல், ரத்த புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளும் புதிய கட்டடத்தில் வழங்கப்பட உள்ளது. புதிதாக இரண்டு அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரங்களும் அதில் பொருத்தப்பட உள்ளது. நவீன லாண்டரி, சமையலறை போன்ற வசதிகளும் அமைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை