சாம்சங் தொழிலாளர்கள் 900 பேர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில், சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்யக்கோருவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் பல கட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் பேரணியாக சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க, சாம்சங் தொழிலாளர்கள், 10 நாட்களுக்கு முன் முயன்றனர். அப்போது அவர்களை காஞ்சிபுரம் போலீசார், வழியிலேயே கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின் விடுவித்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் தேரடியில் இருந்து, தொழிலாளர்கள் பேரணியாக சென்று, கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து, தொழிலாளர்களை தடுத்து நிறுத்த போலீசார், காஞ்சிபுரத்தில் உள்ள தேரடி, கலெக்டர் அலுவலகம், பூக்கடை சத்திரம், ஒலிமுகமதுபேட்டை ,பேருந்து நிலைய பகுதிகளில், முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.ஆனால், 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சீருடை அணியாமல் சாதாரண ஆடையுடன் திரண்டனர். திடீரென்று தேரடி பகுதியில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவும், காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.தேரடியில் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 900 ஊழியர்கள் கைது செய்த போலீசார், மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.