| ADDED : ஜன 15, 2024 03:59 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, பனப்பாக்கம் அருகில் உள்ள மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மனைவி மகா, 21. இவர், இரண்டாவது பிரசவத்திற்காக, திருப்புட்குழியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.பெண்ணுக்கு அரிதான ரத்த வகை இருப்பதால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். திருப்புட்குழியிலிருந்து, நேற்று, அதிகாலை 12:30 மணியளவில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக, அழைத்து செல்லப்பட்டார்.கீழம்பி அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பிரசவ வலி அதிகமாகியுள்ளது. உடனே, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுனர் விக்னேஷ், சாலையோரம் நிறுத்தினார்.மருத்துவ நுட்புனர் எபினேசர், கர்ப்பிணி மகாவுக்கு பிரசவம் பார்த்தபோது, ஆம்புலன்சிலேயே, 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.