உத்திரமேரூர்: திருமுக்கூடல் பாலத்தில் பைக்கில் சென்ற கொத்தனார், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனரக வாகனங்களால் விபத்துக்கள் தொடர்வதால், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என, மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், திருமுக்கூடல் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல, நேற்று ஒரு நாள் போலீசார் தடை விதி த்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 34; கொத்தனார். இவர், நாம் தமிழர் கட்சி கிளை செயலராகவும் இருந்தார். நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில், ஹெல்மெட் அணியாமல், பழைய சீவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமுக்கூடல் பாலாறு பாலத்தின்மீது சென்றபோது, பினாயூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், சக்திவேலுக்கு முன் சென்ற பைக் மீதும் மோதிவிட்டு நிற்காமல் விரைந்தார். தகவலறிந்த சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். பின், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி ஓட்டுநரான, குருவம்மாபேட்டையைச் சேர்ந்த சங்கர், 39, என்பவரை, வடகல்பாக்கம் பகுதியில், போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் அக்., 14ல், திருமுக்கூடல் பாலம் மீது அரசு பேருந்து மோதி, 10 பேர் காயம் அடைந்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டு முறை இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகினர். அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு தீர்வுகோரி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதனம் செய்து கூட்டத்தை கலைத்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, நேற்று, ஒரு நாள் முழுக்க திருமுக்கூடல் பாலம் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு போலீசார் பாலத்தின் இருபுறத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் திருமுக்கூடல் பாலம் மீது, பாதுகாப்பு வசதிகள் ஏற்படு த்துதல் குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் செவிசாய்க்காமல் அலட்சியம் காட்டுவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது: திருமுக்கூடல் பாலாறு பாலத்தை தரமாக சீரமைக்க வேண்டும். பாலம் மீது மின்வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய வேண்டும். பாலாற்று தரைப்பாலம் சீரமைத்து அதன் வழியாக லாரிகள் இயக்க செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதி காரிகளிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திருமுக்கூடல் பாலத்தில் விபத்துகளை தவிர் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். சாலவாக்கம் காவல் ஆய்வாளர் பா லசந்திரன் கூறியதாவது: திருமுக்கூடல் சுற்று வட்டார சாலைகள் மற்றும் பாலாறு பாலத்தின் மீது விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அதிவேகமாக இயங்கும் லாரிகள், அதிகபாரம் ஏற்றும் லாரிகள் போன்றவற்றை கண்டறிந்து வழக்கு பதிவு செய்துள்ளோம். கடந்த வாரத்தில், கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களை காவல் நிலையம் அழைத்து கனரக வாகனங்களால் இடையூறு ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு தரக்கூறி ஆலோசனை செய்துள்ளோம். திருமுக்கூடல் பாலம் அருகே போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்தும், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்வது குறித்தும் உயர் அதிகாரிகளிடத்தில் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.