| ADDED : ஜன 08, 2024 11:57 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகள் பிரதான சாலை ஓரம் இருக்கின்றன. இதில், சேரும் குப்பையை, துாய்மை காவலர்கள் வாயிலாக அகற்றப்படுகின்றன.இருப்பினும், ஒரு சில ஊராட்சிகள் முறையாக குப்பை அகற்றினாலும், ஊராட்சிக்கு ஒதுக்குபுறமாக இருக்கும், பிரதான சாலை ஓரங்களில் குப்பை கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.கிராமப்புற சாலை மற்றும் பிரதான சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் உயரதிகாரிகள் இடையே முகம் சுளிப்பை ஏற்படுத்துகிறது.இது, சமூக வலைதளங்கள் மற்றும் முகநுால் பதிவுகளில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தவிர்க்க, ஊரக வளர்ச்சி துறையினர் கண்காணிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரதான சாலை ஓரம் கொட்டி இருக்கும் குப்பையை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். இதை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.