வேகவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள செங்கல் சூளைகள்
காஞ்சிபுரம்,:ராணிப்பேட்டை மாவட்டடத்தில் பாயும் பாலாற்றின் கிளை ஆறாக துவங்கும் வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரம் வழியாக பாய்ந்து தாங்கி கிராமம் அருகே மீண்டும் பாலாற்றில் இணைகிறது.இரு மாவட்டங்களிலும், 30 கி.மீ., துாரத்துக்கும் அதிக நீளம் கொண்ட இந்த வேகவதி ஆறு, பல இடங்களில் குறுகியும், அகலமாகவும் காணப்படுகிறது. காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களுக்கு இந்த ஆறு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது.ஆனால், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பதாலும் மோசமான நிலையில் இந்த ஆறு உள்ளது. குறிப்பாக, முசரவாக்கம், மேல்ஒட்டிவாக்கம், மேல்கதிர்பூர், கூத்திரமேடு ஆகிய கிராமங்களில் பாயும் வேகவதி ஆற்றில் ஏராளமான செங்கல்சூளைகள் வேகவதி ஆற்றின் குறுக்கே ஆக்கிரமித்து செயல்படுகின்றன.வேகவதி ஆற்றின் குறுக்கே பலரும் செங்கல் சூளை தொழில் நடத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், வேகவதி ஆற்றை ஆக்ரமித்து விவசாயம் செய்கின்றனர்.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதும், வருவாய் துறையினர், நீர்வள ஆதாரத் துறையினர் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் உள்ளனர்.வேகவதி ஆற்றில் ஏற்கனவே உள்ள 1,400 வீடுகளை அகற்ற முடியாமல், அதிகாரிகள் திணறி வரும் நிலையில், ஆற்றின் குறுக்கே ஏராளமான செங்கல் சூளைகள் முளைந்து உள்ளன. இவற்றை, காஞ்சிபுரத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள சப் - -கலெக்டர் ஆசிப் அலி, கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.