புதிய வழித்தடத்தில் பஸ் சேவை துவக்கம்
காஞ்சிபுரம்,:சிறுணை பெருகல் கிராமம் - காஞ்சிபுரம் இடையே புதிய வழித்தடத்தில், அரசு பேருந்து சேவையை, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுணை பெருகல் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக காஞ்சிபுரம் செல்வதற்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் சிறுணை பெருகல் கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ., சிறுணை பெருகல் கிராமம்- - காஞ்சிபுரம் இடையே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சிறுணை பெருகல் கிராமத்தில் இருந்து, ஆரியபெரும்பாக்கம், கீழம்பி வழியாக, காஞ்சிபுரம் வரை செல்லும் வகையில், புதிய வழித்தடத்தில், தடம் எண்576ஏ என்ற அரசு பேருந்து சேவை துவக்க விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கொடியசைத்து புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.