சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், கோடை காலத்தை பயன்படுத்தி புதிதாக ஏராளமான குடிநீர் ஆலைகள் துவக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையங்கள் முறையாக அரசிடம் அனுமதி பெறாமல் இயங்கி வருவதால், கேன் குடிநீரின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1.50 கோடி பேருக்கு மேல் வசிக்கின்றனர். மாநகராட்சி, அரசு சார்பில் இணைப்புகள் வாயிலாகவும், லாரிகள் வாயிலாகவும் குடிநீர் 'சப்ளை' செய்யப்பட்டாலும், பெரும்பாலானோரின் தினசரி தேவையை, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தான் பூர்த்தி செய்கின்றனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், கிராம பஞ்சாயத்து உட்பட பல துறைகளின் அனுமதி பெற்று தான், சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 465 அங்கீகரிக்கப்பட்ட கேன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. விஷமாக மாறும் நிலை
இவற்றில், இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், சந்தை பகுதியில் ஆண்டுக்கு ஆறு முறையும், உற்பத்தி நிலையங்களில் மூன்று முறையும் ஆய்வு செய்து, குடிநீர் தரத்தை உறுதி செய்கின்றன.அதேநேரம், கோடைக்கால தேவையை பயன்படுத்தி, 200க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத திடீர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் குடிநீர் தரம் குறித்து, அரசு துறைகள் ஆய்வு செய்வதில்லை. இவற்றை கண்டுகொள்ளாததோடு, குடிநீர் பிரச்னை தலைதுாக்குவதை தவிர்க்க அரசு நிர்வாகமே இவர்களை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், என்னதான் தண்ணீரை சுத்திகரித்து வழங்கினாலும், கேன் மற்றும் பாட்டிலில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் நச்சுத் தன்மை இருப்பதால், தண்ணீரும் விஷமாக மாறும் நிலை உள்ளது. நச்சுக் கிருமிகள்
தவிர, பாட்டிலில், 'பிஸ்பினால் ஏ' என்ற நச்சு உள்ளது. இது, கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் விரைவாக பூப்பெய்தல், மார்பக புற்றுநோய் போன்றவை ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. பல இடங்களில் முறையாக சுத்திகரிக்காத கேன் குடிநீர், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் கேன், காலவரையின்றி, உள்ளூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏராளமான முறை பயன்படுத்தப்படுவதால், சுகாதார அச்சுறுத்தல் எழுந்துள்ளது.அத்துடன், முறையாக சுத்திகரிக்கப்பட்டாத குடிநீரில், மனிதக் கழிவில் உள்ள ஈகோலை, கோலிபார்ம் போன்ற நச்சு கிருமிகள் இருப்பது, மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. சென்னை மாவட்டத்தில் புற்றீசல் போல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரித்து இருப்பதுடன், குடிநீரின் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது.இந்த கேன் குடிநீர் தரம் குறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்.கேன் குடிநீர் விற்பனை குறித்து, கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ஏ.ஷேக்ஸ்பியர் கூறியதாவது:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, 465 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.இவற்றிற்கான முறையான அனுமதி மற்றும் இந்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி குடிநீரை வினியோகித்து வருகிறோம். எங்களது குடிநீரில் லிட்டருக்கு, கால்சியம் 10 மில்லி கிராம், மெக்னீசியம் 5 மில்லி கிராம் என்ற அளவில் தயாரிக்கப்படுகிறது. கேள்விக்குறி
அத்துடன், 'ஹைட்ரஜன் சக்தி' என்ற பி.ஹெச்., அளவு 6.85 அளவீட்டில் தருகிறோம். இந்த பி.ஹெச் என்பது 0 முதல் 14 வரை இருக்கும். இதில், ஏழு அளவு தான் நடுநிலை. அதற்கு மேல் சென்றால் காரத்தன்மை இருக்கும். எங்களது உற்பத்தியாளர்கள் அனைவரும், அனைத்துவித வழிமுறைகளை பின்பற்றித்தான், மக்களுக்கு தரமான குடிநீரை வழங்கி வருகின்றனர்.அதேநேரம், கடைக்காரர்கள் முறையாக குடிநீர் கேன் சுத்தம் செய்யாமல் இருத்தல், வெயிலில் வைத்திருத்தல் போன்றவற்றால், நீரின் சுவையும், நச்சுத் தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், அனுமதி பெறாமல் 200க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இவை, இந்திய தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறி. பல இடங்களில் நேரடியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு முறையாக சுத்திகரிக்கபடாமல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் மீது அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எலும்பு, நரம்பு நோய்கள் தாக்கும் அபாயம்இந்திய தர கட்டுப்பாட்டு ஆணைய அறிவுறுத்தலின்படி, டி.டி.எஸ்., என்ற அமிழ்த்தப்பட்டுள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு, லிட்டருக்கு 500 மில்லிகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். மனிதர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரில், உடலில் நுண்ணிய அளவில் தேவைப்படும் கனிமங்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும், அதேபோல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்களான கேட்மியம், அஸ்பெஸ்டாஸ், ஈயம், இரும்பு போன்ற தாதுக்களும் இருக்கும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தாதுக்களின் அளவு மிகக் குறைந்தளவு இருந்தால் மட்டுமே அதை குடிநீராக பருக வேண்டும். அதேபோல நல்ல தாதுக்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குள் இருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் உரிய சத்துக்கள் இல்லாதபட்சத்தில் அதைத்தொடர்ந்து பயன்படுத்தும்போது எலும்பு, நரம்பு மண்டல சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும். - டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா,அரசு பொதுநல மருத்துவர், சென்னை
எப்படி தயாராகிறது கேன் குடிநீர்?
கிணற்று நீர் மற்றும் ஆழ்துளை கிணறில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர், குடிநீர் ஆலைகளுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும். அந்த நீரின் டி.டி.எஸ்., அளவு பரிசோதிக்கப்படும். தண்ணீரில் டி.டி.எஸ்., அளவு அதிகமாக இருந்தால், சுவைப்பதற்கு துவர்ப்பாகவும் உப்புத்தன்மையுடனும் இருக்கும். எனவே, டி.டி.எஸ்., எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது.தண்ணீரில் 10,000 லிட்டருக்கு, 1 கிலோ குளோரின் வீதம் கலக்கப்படும். முதலில் கார்பன் பில்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் துாசுக்கள் வடிகட்டப்படும். பின், 'சாண்ட் பில்டர்' என்ற மணல் வடிகட்டியில், நீர் செலுத்தப்படும். அதில் கலங்கலற்ற தெளிவான நீர் கிடைக்கும். தொடர்ந்து, 'மைக்ரான் பில்டர்' என்ற மிக நுண்ணிய துாசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும். பின், 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியில், தண்ணீரில் உள்ள எல்லா துாசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.இதையடுத்து, 'ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்' என்ற சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது துாய்மையாகவும், குடிக்கத் தகுந்ததாகவும் கிடைக்கும். இந்த குடிநீரில், 'அல்ட்ரா வைலட் கதிர்' செலுத்தி சுத்தமான குடிநீராக மாற்றப் படுகிறது. இதன்படி, 1 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் போது 300 மி.லிட்டர் தண்ணீர் வீணாகிறது உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 லிட்டர் கொள்ளளவுள்ள கேன், 7 - 8 ரூபாய்க்கு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகள் வாயிலாக 30 - 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
அரசு தரப்பில், குடிநீர் வாரியங்கள் வாயிலாக வழங்கப்படும் நீரை, குடிநீராக பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் தயங்குகின்றனர். இதனால், சின்னச் சின்ன கடைகளில் கூட, தண்ணீர் கேன் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மற்றொரு புறம், விவசாய நிலப் பகுதிகளில், ஆழ்துளை அமைத்து, நிலத்தடி நீரை குடிநீர் ஆலைகள் உறிஞ்சி வருவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் சப்ளையாகும் கேன் குடிநீருக்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாய நிலங்களில் அதிகளவில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் நிலத்தடி நீர் அதிகளவில் கிடைக்கிறது. நிலத்தடி நீர் அதிகம் உள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, ஆர்.ஓ., பிளாட்டுகள் எனும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான இடங்களில் உரிய அனுமதி பெறாமல் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து நீர் எடுக்கப்படுகிறது. 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத குழாய் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால், விவசாயத்திற்கு போதிய நீரின்றி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடிநீர் ஆலைகள் நீர் எடுக்கும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அம்மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.- நமது நிருபர் -