| ADDED : நவ 27, 2025 04:40 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுவருகிறது. உத்திரமேரூரை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், காதணி விழா, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்டவைக்காக, சரக்கு வாகனங்களில் வெளியூர்களுக்கு தினமும் பயணித்து வருகின்றனர். அதேபோல, கட்டட வேலை, கூலி வேலைக்கு செல்பவர்களும் சரக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர். அவ்வாறு ஆட்களை ஏற்றும் வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. சில விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், இதுபோன்று சரக்கு வாகனங்களில், ஆட்களை ஏற்றிச் செல்லும் நிகழ்வு தொடர்கிறது. அவ்வாறு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவராஜ் கூறுகையில், ''சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ''சிலர், விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.