உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு

வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்கள் இரவு நேரங்களில் கால்நடைகள் உறைவிடமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் வசிப்போர் பலரும் கால்நடைகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், இரவு நேரத்தில் தங்களது கால்நடைகளை கொட்டகையில் அடைக்காமல் தெருக்களில் விடுவதை பலரும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதனால், கூட்டமாக தெருக்களில் படுத்து ஓய்வெடுக்கும் கால்நடைகளால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். வாகனங்கள் வரும்போது, தெருக்களில் கால்நடைகள் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாலாஜாபாதில் தங்கி சுற்று வட்டார தனியார் தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர். இத்தொழிலாளர்கள், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, கால்நடைகள் முட்ட வருவதாலும், தெருவில் வழியின்றி படுத்துள்ளதாலும் தினமும் அவதிபடுகின்றனர். எனவே, வாலாஜாபாதில் இரவு நேரங்களில் கால்நடைகளை தெருக்களில் விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை