உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஐகோர்ட் தற்காலிக தடையை அடுத்து தேர் வெள்ளோட்டம் நிறுத்தம்

ஐகோர்ட் தற்காலிக தடையை அடுத்து தேர் வெள்ளோட்டம் நிறுத்தம்

வாலாஜாபாத்:புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததையடுத்து, தேர் வெள்ளோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் விழாவில் அம்மன் தேர் வீதியுலா நடப்பது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தேர் பழுது காரணமாக தேரோட்டம் இல்லாமல் விழா நடைபெறுகிறது. இதனிடையே, இக்கோவிலுக்கு பொதுநல நிதியின் கீழ், 28.40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கி நடைபெற்று வந்தது. தேர் திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து, தேர் வெள்ளோட்டம் நேற்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், வெள்ளோட்டத்தின் போது தங்கள் பகுதி தெருவிலும் தேர் உலா வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு மற்றொரு பிரிவினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த வி.சி., கட்சி பொறுப்பாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், புத்தகரத்தில் தேர் வீதியுலா நடத்துவது தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அதுவரை தேர் வெள்ளோட்டம் நடத்த தடை விதித்து வழக்கு தொடர்பான மறு விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் புத்தகரம் கிராமத்திற்கு வி.சி., கட்சி மாநில தலைவர் தொல் திருமாவளவன் வந்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி