ஹாக்கி ஸ்டிக் 6.35 மணி நேரம் பிடித்த சாதனையாளருக்கு கலெக்டர் பாராட்டு
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 40; இந்தியன் வங்கி ஊழியர். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர், விளையாட்டு முக்கியத்துவத்தை அனைவரும் உணர, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹாக்கி மட்டையை, ஒரே விரலில் செங்குத்தாக நீண்டநேரம் நேர்நிறுத்தி பேலன்ஸ் செய்யும் உலக சாதனை செய்ய முடிவு செய்தார்.இதையொட்டி, 2019ம் ஆண்டு முதல், 646 கிராம் எடை கொண்ட ஹாக்கி மட்டையை ஒரு விரலில் செங்குத்தாக நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட, 6 மணி நேரம் 5 நிமிடம் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தன் சாதனை முயற்சியை, கடந்தாண்டு மே 12ல், காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கில், நிகழ்த்தினார்.தொடர்ந்து 6 மணி நேரம் 35 நிமிடம் ஹாக்கி மட்டையை ஒரே விரலில் நேர்நிறுத்தி பேலன்ஸ் செய்த சாதனையை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற, விண்ணப்பித்து இருந்தார்.அதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில், அருண்குமார் கின்னஸ் சாதனை படைத்த ஆங்கீகாரத்தை, கின்னஸ் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது.இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தன் குடும்பத்தினருடன் சென்று பாராட்டு பெற்றார். கின்னஸ் சாதனை படைத்த அருண்குமாருக்கு, கலெக்டர் கலைச்செல்வி வாழ்த்து தெரிவித்தார்.