செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ரூ.23 கோடியில் கான்கிரீட் சுவர்
குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது.கடந்த 2023ம் ஆண்டு, 'மிக்ஜாம்' புயலின்போது பெய்த கனமழையால், ஏரியின் 5 கண் மதகு அருகே, கரையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு சேதமாகியது.இதையடுத்து, 22.95 கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையை சீரமைத்து பலப்படுத்தும் பணிகளை, நீர்வளத்துறையினர் கடந்த ஏப்ரலில் துவங்கினர்.இந்த பணிகளின் ஒரு பகுதியாக, ஏரியின் உபரி நீர் வெளியேறும் ஐந்து கண் மதகு அருகே சரிந்த கரையில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள், ஏரிக்கரையில் கைப்பிடி சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அலை தடுப்பு சுவர், உட்புற கரை பாதுகாப்பு கான்கிரீட் சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள், 22.95 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.